இரண்டு மாத லாக்டவுனுக்கு பிறகு தளர்வுகளை அறிவித்தது மாஸ்கோ

கட்டுப்பாடுகள் தளர்வு... கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையான முடக்கநிலையின் கீழ் இருந்த ரஷ்ய தலைநகர் மாஸ்கோ கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுவீதம் குறைந்துள்ளதால், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தலைநகரில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்களுக்கு பயணத்திற்கு இனி மின்னணு அனுமதி அட்டை தேவையில்லை, மேலும் நடமாடலாம், பொது போக்குவரத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாமல் வாகனம் ஓட்டலாம். சிகையலங்கார நிபுணர் மற்றும் அழகு நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

இதேவேளை இரண்டாவது கட்ட தளர்வுகளில், எதிர்வரும் ஜூன் 16ஆம் திகதி முதல் அருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் வெளிப்புற மொட்டை மாடிகளை திறக்க முடியும். அருங்காட்சியகங்கள், நூலகங்கள் போன்ற பொது வசதிகளும் அப்போது திறக்க அனுமதிக்கப்படும்.

எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி தொடங்கும் மூன்றாவது கட்ட தளர்வுகளில், உட்புறத்தில் இருந்து சாப்பிடலாம். மேலும், உடற் பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் போன்ற வசதிகள் மீண்டும் திறக்கப்படும்.

கடந்த மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட முடக்கநிலையின் கீழ், அனைத்து அத்தியாவசிய வணிகங்களும் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து மாஸ்கோவில் 197,000 ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.