போர்ப்ஸ் பட்டியலில் தொடர்ந்து 13-வது முறையாக முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரராக இடம் பிடிப்பு

அமெரிக்க வர்த்தக பத்திரிகை ‘போர்ப்ஸ்’, இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரராக இடம் பிடித்துள்ளார்.

இதன் மூலம், தொடர்ந்து 13-வது முறையாக முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரராக உள்ளார். முதல் இடம் வகிக்கிற அவருக்கு 88.7 பில்லியன் டாலர் அளவிலான சொத்துகள் உள்ளன. அதாவது இந்திய மதிப்பில், சுமார் ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 250 கோடி சொத்து ஆகும்.

இரண்டாவது இடத்தில் கவுதம் அதானி சுமார் ரூ.1.89 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உள்ளார். 3-வது இடத்தில் தமிழகத்தின் சிவநாடார் 1.53 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உள்ளார். 4-வது இடத்தை ராதாகிருஷ்ணன் தமானி, 5-வது இடத்தை இந்துஜா சகோதரர்கள் ஆகியோர் பிடித்துள்ளனர்.

6-வது இடத்தை சைரஸ் பூனவாலா, 7-வது இடத்தை பல்லோஞ்சி மிஸ்த்ரி ஆகியோரும், 8-வது இடத்தை உதய் கோடக், 9-வது இடத்தை கோத்ரேஜ் குடும்பத்தினர், 10-வது இடத்தை லட்சுமிமிட்டல் ஆகியோரும் பிடித்துள்ளனர்.