மத்திய உள்துறை செயலருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். இவ்வாறு சொந்த ஊர் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்து வந்தனர். சிலர் செல்லும் வழியில் இறந்துள்ளனர். மேலும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு பலர் விபத்துகளில் சிக்கியும் உயிரிழந்தனர்.

இவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு குஜராத், பிகார் மாநில தலைமைச் செயலர்கள், ரயில்வே வாரிய தலைவர், மத்திய உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:- ரயில்களில் சொந்த ஊர் செல்லும் ஏழை தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க மாநில அரசுகளும், ரயில்வே நிர்வாகமும் தவறிவிட்டன. இது கவலை அளிக்கும் விஷயமாகும். ஏழை தொழிலாளர்களை காட்டுமிராண்டிகள் போல ரயில்வே நிர்வாகம் நடத்தியுள்ளது. அவர்கள் மீது மனிதத்தன்மையற்ற முறையில் ரயில்வே நிர்வாகம் நடந்துள்ளது. ஊரடங்கு என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் செய்த தவறுகளை மறைக்க முடியாது.

இதுதொடர்பாக அடுத்த 4 வாரங்களுக்குள் ரயில்வே வாரிய தலைவர், மத்திய உள்துறை செயலர், பிகார், குஜராத் மாநிலதலைமைச் செயலர்கள் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். ஏழைத் தொழிலாளர் நலனுக்காக எடுக்கப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.