ரஷ்ய அதிபருக்கு நேட்டோ கூட்டமைப்பு விடுத்த கண்டனம், மிரட்டல்

நியூயார்க்: முதல்முறையாக வந்த எச்சரிக்கை... உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தமது நாட்டுடன் இணைத்துக்கொண்டு விளாடிமிர் புடின் ஆற்றிய உரைக்கு நேட்டோ கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் மிரட்டலும் விடுத்துள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் சற்று பரபரப்பு எழுந்துள்ளது.

உலக நாடுகளை ஆபத்தின் விளிம்பில் கொண்டு நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புடினின் பேச்சு உள்ளதாக நேட்டோ சாடியுள்ளது. அத்துடன் , ரஷ்யாவின் போக்கால் அணு ஆயுத போர் மூளும் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் நேட்டோ முதன்முறையாக மிரட்டல் விடுத்துள்ளது.

இதனிடையே, மேற்கத்திய இராணுவக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் Jens Stoltenberg தெரிவிக்கையில், விளாடிமிர் புடினின் வெட்கம் கெட்ட நில அபகரிப்பு செயல்களால் உக்ரைனுக்கு அளித்து வரும் நிபந்தனையற்ற ஆதரவை நேட்டோ கைவிடாது என்றார். மேலும், விளாடிமிர் புடினின் தற்போதைய செயல், உலக நாடுகளை அணு ஆயுத போரின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைனுக்கு அளித்துவரும் ஆதரவு தொடரும் எனவும், அது ரஷ்யாவின் படையெடுப்பு முடிவுக்கு வரும் வரையில் நீடிக்கும் எனவும் Jens Stoltenberg தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அவசரகால ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது, இதில், ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ராணுவ உதவி அளிக்கும் என்று ஜோ பைடன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.