கோமா நிலைக்கு தள்ளப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் முழுமையாக குணம்

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர். இந்நிலையில் அலெக்சி நவால்னி, விமான பயணத்தின் போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்றார். அலெக்சி நவால்னியை கொலை செய்ய அவர் குடித்த டீயில் விஷம் கலந்திருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் ரஷியாவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டு தலைநகர் பெர்லினில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கடந்த மாதம் 22-ந் தேதி முதல் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அலெக்சி நவால்னி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோமாவில் இருந்து மீண்டார்.

அதன்பின், அலெக்சி நவால்னி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் நிலை முழுமையாக தேறியதை தொடர்ந்து நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

தற்போது, அலெக்சி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி வரும் ஜெர்மனி இது தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்த ரஷியாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.