நியூராலிங்க் நிறுவன ஊழியர்கள் புகார்... எலான் மஸ்க் நிறுவனத்திற்கு சிக்கல்

நியூயார்க்: விலங்குகளிடம் நடந்த பரிசோதனைகள் விரைவுபடுத்தப்பட்டு அவசர கதியில் நடத்தப்பட்டதாக நியூராலிங்க் நிறுவன ஊழியர்கள் புகார் அளித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் எலான் மஸ்க் நிறுவனத்திற்கு சிக்கலும் உருவாகி உள்ளது.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்நிறுவனம் 2018 முதல் நடத்தி வரும் பரிசோதனைகளில் இதுவரை, 280க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள் மற்றும் குரங்குகள் உட்பட சுமார் 1,500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விலங்குகளிடம் நடந்த பரிசோதனைகள் விரைவுபடுத்தப்பட்டு அவசர கதியில் நடத்தப்பட்டதாக நியூராலிங்க் நிறுவன ஊழியர்கள் புகார் அளித்தனர்.

இதன் காரணமாக விலங்குகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு, உயிரிழப்புகளை சந்தித்த நிலையில் விலங்குகள் நலன் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க அரசு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.