அரசு போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக இயக்கத்துக்கு வரவுள்ள பேருந்துகளுக்கு மஞ்சள் வண்ணம் அடிக்கப்படுகிறது


சென்னை:மஞ்சள் நிறத்தில் மாறும் அரசுப் பேருந்துகள் ... தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிற பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது இப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தற்போது 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்து உள்ளது. எனவே அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கபட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இருக்கைகள், ஜன்னல், கம்பிகள் ஆகியவை சேதமடைந்த பழைய பேருந்துகளை சரி செய்யும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு சுமார் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக பேருந்து கட்டுமான மாநகரமான கரூரில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டு வருகிறது.


கரூர் அடுத்த மண்மங்கலம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் நிறுவனத்தின் கரூர் மண்டலத்தை சேர்ந்த அரசு பேருந்து கூண்டு கட்டும் பிரிவில் தயாரான நிலையில் சுமார் 25 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று, கோவிந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பஸ் பாடி நிறுவனத்திலும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கி வரும் பேருந்துகளில் நீலம், பிங்க், பச்சை உள்ளிட்ட நிறங்கள் அடிக்கப்பட்டு உள்ளது. அதனால் சீரமைக்கப்படும் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.