மும்பை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

மும்பை: மும்பை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தேவேந்திர குமார் உபாத்யாய் பதவி ஏற்றார்.

மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.டி.தனுகா கடந்த மே 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இடைக்கால தலைமை நீதிபதியாக நீதிபதி நிதின் ஜம்தார் நியமிக்கப்பட்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தேவேந்திர குமார் உபாத்யாய், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொலிஜியத்தின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பணி நியமன ஆணையை வழங்கினார்.

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா நேற்று மதியம் ராஜ்பவனில் நடைபெற்றது. விழாவில் தேவேந்திர குமார் உபாத்யாய்க்கு ஆளுநர் ரமேஷ் பயஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷாண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜூன் 1965 இல் பிறந்த தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய் 1991 இல் லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.