இலங்கையில் 107 நாட்களுக்கு பிறகு அதிபர் அலுவலகம் மீண்டும் செயல்பட தொடங்கியது

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் அரசின் மீது கடும் கோபம் அடைந்த அந்த நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடங்கினர்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி அதிபர் அலுவலகத்தின் நுழைவாயிலை போராட்டக்காரர்கள் அடைத்தனர். அப்போது முதல் அதிபர் அலுவலகம் செயல்படாமல் இருந்து வந்த சூழலில் கடந்த 9-ந்தேதி போராட்டகாரர்கள் அதிபர் அலுவலகத்துக்குள் நுழைந்து சூறையாடியதோடு, பல நாட்கள் அங்கேயே தங்கினர்.

இச்சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் அலுவலகத்துக்குள் இருந்த போராட்டக்காரர்கள் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதை தொடர்ந்து, 107 நாட்களுக்கு பிறகு அதிபர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

இதனை அடுத்து அதிபர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து தங்களின் வழக்கமான பணிகளை தொடங்கினர்.