நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெப்பசலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களிலும் கூட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செ.மீ., பந்தலூரில் 14 செ.மீ., பவானியில் 13 செ.மீ., வால்பாறையில் 12 செ.மீ. என மழை பெய்துள்ளது.