ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைத்தால் அகற்றப்படாமலோ ,கிழிக்கப்படாமலோ இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் .. நிர்மலா சீதாராமன்

இந்தியா: இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று கொண்டு வருகின்றனர். இதை அடுத்து தெலுங்கானா மாநிலத்தில் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

மேலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுவதற்கு பெரும் பங்கு மத்திய அரசினையே சாரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உடன் கலந்து கொண்ட காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எவ்வளவு பங்கு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆட்சியர் வெளிச்சந்தையில் தோராயமாக ரூ.35க்கு விற்கப்படும் அரிசி, ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார். இதில் மத்திய அரசு 30 ரூபாயும், மாநில அரசு 4 ரூபாயும் வழங்குவதாகவும், ரேஷன் கடை பயனாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது என அவர் கூறினார்.

கடந்த 2020 ஆண்டு முதல் இந்த திட்டம் முற்றிலும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து ஏழை மக்களுக்கு பிரதமரின் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 கிலோ உணவு தானியங்களுக்கான முழுச் செலவையும் மோடி அரசே ஏற்கிறது என தெரிவித்தார்.

எனினும் ரேஷன் கடைகளில் மோடியின் படத்தை என் வைப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதை அடுத்து, பாஜகவினர் பிரதமர் மோடியின் பேனரை ரேஷன் கடைகளில் வைத்தால், அது அகற்றப்படாமலோ அல்லது கிழிக்கப்படாமலோ இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.