எந்த அரசும் இயற்கையோ அல்லது இயற்கைக்கு மாறானதோ கிடையாது - சஞ்சய் ராவத்

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி இயற்கைக்கு மாறானது. இந்த ஆட்சி கவிழ்ந்தவுடன் பா.ஜனதா நிலையான ஆட்சியை வழங்கும் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய் ராவத் எம்.பி. சாம்னாவில் கட்டுரை எழுதி உள்ளார்.

அதில், அரசியலில் யாரும் துறவி இல்லை. எந்த அரசும் இயற்கையோ அல்லது இயற்கைக்கு மாறானதோ கிடையாது. ஒரு அரசு இருக்கும் வரை அது இயற்கையானது தான். அதை கவிழ்க்க சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவை பயன்படுத்தப்படுகிறது. சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியவர்கள், தற்கொலைக்கு தூண்டியவர்கள் எல்லாம் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அந்த கட்டுரையில் மகாவிகாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது, சட்டசபை சபாநாயகர் பதவியை பகிர்ந்து கொள்வதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதலையும் சஞ்சய் ராவத் நினைவு கூர்ந்து உள்ளார். அதில், நேரு சென்டரில் சபாநாயகர் பதவி தொடர்பாக காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் பதவி தேசியவாத காங்கிரசுக்கு போய்விட கூடாது என்பதில் கார்கே, மற்றவர்கள் உறுதியாக இருந்தனர். சரத்பவார் அதுபோல கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் தனது கோப்புகளை வாங்கிக்கொண்டு கோபமாக அறையில் இருந்து வெளியேறினார். நானும், பிரபுல் பட்டேலும் அவரை பின்தொடர்ந்து சென்றோம். கூட்டம் தொடங்கிய போதே உத்தவ் தாக்கரே தான் முதல்-மந்திரி என சரத்பவார் கூறிவிட்டார் என தெரிவித்தார்.