ராகுல் காந்தி மீதான போலீஸ் தாக்குதலுக்கு யாரும் ஆதரவு தர மாட்டார்கள் - சஞ்சய் ராவத் கருத்து

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஹத்ராஸ் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இதனால் அங்கு போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களின் கிராமத்தை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, ராகுல் காந்தி அம்மாநில போலீசாரால் தாக்கப்பட்டார்.

மேலும் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி கூறுகையில், எங்களுக்கு காங்கிரஸ் கட்சியுடன் வேறுபாடுகள் இருக்கலாம். 144 தடை உத்தரவை காரணம் காட்டி ராகுல் காந்தி ஹாத்ராசுக்கு செல்லாமல் தடுத்து இருக்கலாம். ஆனால் போலீசார் அவரின் சட்டை காலரை பிடித்து, தரையில் தள்ளிய சம்பவம் மிகுந்த கண்டனத்திற்கு உரியது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இது ஜனநாயக கூட்டு பலாத்காரம். அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்படி எதிர்கட்சி தலைவரை நடத்தினால், யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா? எப்போதும் போல அரசியல் ரீதியாக அவரை நீங்கள் ஏளனம் செய்ய முடியும். ஆனால் போலீசார் அவரை தாக்கிய சம்பவத்திற்கு யாரும் ஆதரவு தர போவதில்லை என்று கூறினார்.