விசாரணை ஆஜராக கூறி பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவருக்கு நோட்டீஸ்

சென்னை: பாஜ பிரமுகருக்கு நோட்டீஸ்... பா.ஜ.க மாநில தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், நேரில் ஆஜராக கோரி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதி அளிக்காததால் அவரது வருகை இந்த ஆண்டு தள்ளிப்போனதாக சி.டி.ஆர் நிர்மல் குமார் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மொகிந்தர் அமர்நாத் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இப்புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடந்த மாதம் 14 ஆம் தேதி சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கலகம் செய்ய தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.டி.ஆர் நிர்மல் குமாரிடம் பல்வேறு விளக்கங்கள் கேட்கவுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குறிப்பாக நாளை காலை 11 மணிக்கு சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.