ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போது தான் மிக கவனமாக இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்று கிழமையும் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்தின் இறுதி ஞாயிற்று கிழமையான இன்று பிரதமர் மோடி வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஊரடங்கு காலத்துடன் ஒப்பிடும் போது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாம் இப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவேளி உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றமலும் செயல்பட்டால் நீங்கள் மற்றவர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம் என்று கூறினார்.

மேலும் அவர், இந்த ஆண்டு இந்தியாவில் பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை. மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவற்றுக்கான தேவை உலக அளவில் அதிகரித்திருக்கிறது. இந்திய பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிப்பதாக அவர் கூறினார்.

இந்தியா எப்போதும் தனக்கான பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றியுள்ளதாகவும், நமது சுயமரியாதை, இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், நட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடிகொடுக்கவும் தெரியும் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.