செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நடத்தப்படும் - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில் பிரதமர் மோடி பேசுகையில், பண்டிகை காலம் களைகட்ட தொடங்கி உள்ளதல் மக்கள் பொறுப்புடனும், அதிக எச்சரிக்கையுடன் பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில்கூட ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியின்போது இயற்கை முறையில் செய்த விநாயகர் சிலைகளை காண முடிந்ததாக கூறினார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்கள் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை கணினிமயமாக்குவது சிறப்பானதாக இருக்கும். நமது பழங்கால விளையாட்டுகளை புதிய டிஜிட்டல் கேம்களாக உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

வருகிற செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும். மாதம் முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஊட்டச்சத்து தொடர்பான போட்டிகள் நடத்தப்பட உள்ளதால், மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.