அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

அமேரிக்காவில் வரும் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் ஜனநாயக கட்சி தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நேற்று முன்தினம் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று நடந்த மாநாட்டில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசிய, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, ஆப்பிரிக்க அமெரிக்க பெண் எனும் புதிய வரலாற்றை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார். இந்த மாநாட்டில் கமலா ஹாரிஸ் பேசியபோது, ஜனநாயக கட்சி என்னை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததை நான் ஏற்கிறேன். இந்த அறிவிப்பை நான் அனைத்து கறுப்பின பெண்களுக்கும் உரிமைக்காக போராடும் பெண்களுக்காக சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

மேலும் அவர், அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப்பின் தலைமை தோல்வி அடைந்த தலைமை. அமெரிக்காவில் நடக்கும் உயிரிழப்புகளை, சோகங்களை அரசியல் ஆயுதங்களாக டிரம்ப் பயன்படுத்துகிறார். டிரம்ப்பின் தலைமை தோல்வியால்தான் கொரோனாவில் லட்சக்கணக்கான உயிர்களை இழந்தோம், வாழ்வாதாரத்தை இழந்தோம். தேசத்தின் எதிர்காலத்தை அனைவரையும் சேர்ந்து கட்டமைக்க முயல்பவராக ஜனாதிபதியாக இருக்க வேண்டும். அந்த சிறந்த ஜனாதிபதியாக நாம் ஜோ பைடனை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.