எதிர்ப்பு வாசகங்கள் அட்டையுடன் தனியொருவராக போராடிய முதியவர்

கரூர்: ஆபரேஷன் செய்து கண்களில் பிரச்னை இருப்பதாக தெரிவித்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் முதியவர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சியம்மன் கோவில் தெருவில் விஜி என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் கரூர்-கோவை சாலையில் இருக்கும் சோமசுந்தரம் கண் மருத்துவமனை முன்பு வாசகங்கள் எழுதிய அட்டையை கழுத்தில் தொங்க விட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்ததாக முதியவர் தெரிவித்தார். ஆனால் ஒரு மாதம் கழித்து கண்ணில் இருந்து நீர்வடிதல் ஏற்பட்டு தற்போது வரை சரியாகவில்லை.

இதனால் அறுவை சிகிச்சை செய்தும் பலன் இல்லாமல் போனதால் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக முதியவர் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.