தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்!

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் வெளி மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதன்படி, அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் தற்போது பேருந்துகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வருகின்றன.

ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து பேருந்துகளை இயக்க முன்வரவில்லை.

பேருந்துகள் ஓடாத மாதங்களில் கட்ட வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இருந்தனர். இந்த நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மத்திய- மாநில அரசின் விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பயணிகள் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.