சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்குபூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு

ஆன்லைனில் முன்பதிவு... சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த ஆறு மாதங்களாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், நவம்பர் 16-ம் தேதி முதல், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பக்தர்களை அனுமதிக்கக் கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், மண்டல, மகர விளக்குப் பூஜைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்களின் வசதிக்காக மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனைத்துவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது.

பூஜை காலங்களில் தினமும் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 5000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வனப்பாதையில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கிய பரிசோதனை நிச்சயம் செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.