இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, வாழ்வை பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை வேண்டும் .. எடப்பாடி

தருமபுரி : சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முறையாக தருமபுரி மாவட்டத்திற்க்கு இன்று வருகை புரிந்தார். அப்போது கட்சி அலுவலகம் அருகேயுள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதன் பின் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம். அதை கண்ணை இமை காப்பதுபோல காப்பாற்றியவர் ஜெயலலிதா. இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இயக்கத்தில் உங்களின் ஆசியோடு இடைக்கால பொது செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பு கிடைத்துள்ளது.

மேலும் இந்த பொறுப்பை ஏற்றவுடன் உங்கள் அழைப்பை ஏற்று ஓடோடி வந்துள்ளேன். இங்கு எழுச்சிமிகு வரவேற்பை கொடுத்துள்ளீர்கள். இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, அவர்களின் வாழ்வை பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்கள் கருத்து கேட்பை நடத்துவது சரியல்ல.

இதை அடுத்து தற்போது தமிழக அரசு மின் கட்டண உயர்வு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட வரி ஏற்றத்தால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உட்பட்டு கொண்டு வருகின்றனர் என அவர் பேசினார்.