விருதுநகரில் 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு

விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம், ராமலிங்கபுரம் அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. பின்னர் அவர் பேசியதாவது:- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது சுகாதாரத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வறுமையில் இருப்பவர்கள் எந்த அளவிற்கு வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுவார்கள் என்பதை எண்ணி அதற்கான திட்டங்களை வழங்கி வருகிறார்.

கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வருகிறார். இம்மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 இடங்களில் அம்மா கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது சங்கரலிங்கபுரம், ராமலிங்கபுரம், குறும்படம், செட்டிகுறிச்சி, அருப்புக்கோட்டையில் 3-வது வார்டு, திருச்சுழியில் வெள்ளையாபுரம் என ஆறு இடங்களில் மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள இடங்களிலும் படிப்படியாக இந்த வசதி செய்து தரப்படும். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசு தொகை ரூ. 2,500 வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழக மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வாழ வேண்டுமென்பதே ஜெயலலிதாவின் எண்ணமாகும். அதே வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து சிகிச்சை முறைகளை பார்வையிட்ட அமைச்சர் ஏழு கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகங்களையும், 12 கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவியையும் வழங்கினார்.