சூடானில் இருந்து இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி தொடக்கம்

சூடான்: ஆபரேஷன் காவேரி தொடக்கம்... உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் காவேரியை தொடங்கியுள்ளது.

ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே 10 நாட்களாக சண்டை நடந்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஏற்கனவே சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்துக்கு வந்துள்ளதாகக் கூறி, அதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அனைவரையும் மீட்டுவர உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்தியர்களை மீட்பதற்காக சவுதி அரேபியாவில் இரண்டு விமானப்படை விமானங்களையும், சூடான் துறைமுகத்தில் ஒரு கடற்படைக் கப்பலையும் இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் விமானப்படை விமானம் மூலம் 5 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் சவுதி அரேபியாவும் சில இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.