ஆயுதபூஜையை ஒட்டி 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிறப்பு பேருந்துகள்... ஆயுதபூஜையொட்டி சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று தெரிய வந்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், கடந்த மாதம் 7ம் தேதி முதல் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா அச்சம் காரணமாக ஆரம்பத்தில் பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை நாட்கள் வர உள்ளதால், பயணிகளின் தேவையைக் கருதி சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராகி வருகின்றன.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ''ஊரடங்கு தளர்வு அறிவித்தவுடன் ஆரம்பத்தில் சென்னையில் இருந்து 500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது, 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வரும் 25-ம்தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளோம். அதன்படி, சென்னையில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளோம். தேவைப்பட்டால் உடனுக்குடன் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

300 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்து நவம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்'' என்றனர்.