நவம்பர் முதல் மின்சார ரெயில் சேவையை தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் நவம்பர் முதல் வாரம் முதல் மின்சார ரெயில் சேவையை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் மின்சார ரெயில் சேவை 7 மாதமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ரெயில்வே பணியாளர்கள் பணிக்கு செல்ல வசதியாக சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் தனியார் ஊழியர்கள், பொது மக்கள் பயணம் செய்ய அனுமதி இல்லை. இதனால் பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு சென்னையில் குறைந்து வருகிறது. இதனால் புறநகர் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மின்சார ரெயில் சேவையை தொடங்குவதற்கு சென்னை டிவிசன் தயாராகி வருகிறது. கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்குவதற்கு ரெயில்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

ஒரு மாநிலத்தில் பொது போக்குவரத்தை தொடங்குவது குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து மின்சார ரெயில் சேவையை இயக்குவதற்கான அனுமதி அடுத்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. அனுமதி கிடைக்க பெற்ற பிறகு நவம்பர் முதல் வாரம் முதல் மின்சார ரெயில் சேவையை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.