கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு; ஓபிஎஸ் கோரிக்கை நிறைவேறியது

தமிழகத்தில் அடுத்த வருடம் மே மாதம் சட்டமன்ற தேர்தலில் நடக்கவிருக்கும் நிலையில், அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது.

இதனையடுத்து கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இன்று காலையிலும் ஆலோசனை நீடித்தது.

இந்நிலையில் காலை 10 மணியளவில் அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முறைப்படி அறிவித்தார்.

இதேபோல் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன்மூலம் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையும், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற ஈபிஎஸ் கோரிக்கையும் நிறைவேறி உள்ளது. கட்சி அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.