அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்ய உத்தரவு

கூடுதல் படுக்கைகள் தயார் செய்ய உத்தரவு... உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்யுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்குகிறது. அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,778 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதித்து கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகள் அனுமதிக்கப்படும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர மருத்துவமனைகளில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகளை அதிகரிக்குமாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், படுக்கை வசதிகளை அதிகரிப்பதோடு, அதற்கேற்ப மருத்துவ பணியாளர்களின் தேவையையும் அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டு, அவை சீராக செயல்படவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலன் குறித்து கேட்டறிய வேண்டும் என்றும் கூறியுள்ள முதல்வர், கான்பூரில் வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கை வசதிகளை அதிகரிக்குமாறும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.