இ-பாஸ் தளர்வு காரணமாக மாமல்லபுரத்தில் குவிந்த வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள்

இ-பாஸ் தளர்வு காரணமாக மாமல்லபுரத்தில் நேற்று அதிகளவில் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது வரை சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை நீடிக்கிறது. இருப்பினும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் திறக்கப்படாமல் உள்ளன. ஆனாலும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொதுமக்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாமல்லபுரத்துக்கு வருகை தந்தனர். உள்ளூர் மக்களை விட வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாமல்லபுரத்துக்கு வந்தனர்.

கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் உள்ள பகுதிக்கு சென்றனர். அங்கு பார்வையாளர் கட்டண மையம் மூடப்பட்டு புராதன சின்னங்கள் திறக்கப்படாமல் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு உள்ளதை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் திறந்த வெளியில் உள்ள அர்ச்சுணன் தபசு, கிருஷ்ண மண்டபம், திருமூர்த்தி மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து சென்றனர். மழை தூறலையும் பொருட்படுத்தாமல் பலர் சிற்பங்கள் முன்பு நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அதேபோல் நேற்று ஆன்லைன் வகுப்புகள் இல்லாததால் மாணவர்கள் பலரும் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். இ-பாஸ் தளர்வு காரணமாக அதிகமானோர் கார், இரு சக்கர வாகனங்களில் மாமல்லபுரம் வந்திருந்ததை காண முடிந்தது.