போர்களம் போல் வன்முறைகளால் காட்சியளிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இம்ரான்கான் கைது சம்பவத்தை அடுத்து அவரது ஆதரவாளர்களால் நடத்தப்படும் வன்முறையில் போர்களம் போல் காட்சியளிக்கிறது.

பாகிஸ்தானில் ஊழல் செய்ததாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் வழக்கு ஒன்றில் ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு அவர் வந்தார். அந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்தில் புகுந்த ராணுவத்தினர் இம்ரான் கானை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது இம்ரான்கானுக்கும் அவரின் வழக்கறிஞருக்கும் காயம் ஏற்பட்டது.

கராச்சியில் திரண்டிருந்த இம்ரான் கானின் ஆதரவாளர்கள் வாகனங்கள், கார்கள் மற்றும் சாலைகளில் கண்ணில் தென்படும் அனைத்தையும் எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். லாகூரில் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் ஊற்றி போலீசார் விரட்டியடித்தனர்.

பெஷாவரில், இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி சென்று கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய கண்ணீர் புகை குண்டும் மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களில் காயமடைந்த ஏராளமானோர் ஆம்புலன்ஸ்களிலும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத்தில் இம்ரானின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர், பொது சொத்துக்கள் மற்றும் இராணுவ தலைமையகங்களை சேதப்படுத்தினர் மற்றும் சாலையின் நடுவில் டயர்களை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இம்ரானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் வானொலி அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.