விமானத்தில் செல்லும் பயணிகளை 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்

விமானப் பயணிகளுக்கு கிடுக்கிப்பிடி... தமிழகத்திற்குள் விமானத்தில் செல்லும் பயணிகளை, ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்' என அரசு உத்தரவிட்டுள்ளது.

விமான பயணிகளுக்கான, வழிகாட்டி விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்திற்குள், விமானத்தில் பயணம் செய்யும், அனைவரது உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்படும். நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

தமிழக அரசு இணையதளம் வழியே, 'இ- பாஸ்' பெற்றவர்கள் மட்டுமே, விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர். இரு தினங்களுக்கு முன் எடுக்கப்பட்ட, கொரோனா நோய் பரிசோதனை முடிவு, நெகட்டிவாக இருந்தால், அவருக்கு பரிசோதனை தேவையில்லை.

அலுவல் ரீதியாக வெளியூர் சென்று விட்டு, 48 மணி நேரத்தில் திரும்புவோருக்கு, தனிமைப்படுத்துதல் தேவையில்லை. மற்றவர்கள், ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். தமிழகத்தில் இருந்து, பிற மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள், வெப்பநிலை பரிசோதனைக்கு பின், விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவர்.

நோய் அறிகுறி இருந்தால், பயணம் செய்ய அனுமதி கிடையாது. பயணிகள் எந்த மாநிலத்திற்கு செல்கின்றனரோ, அந்த மாநில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும், கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்; ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

நோய் தொற்று இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். நோய் தொற்று இல்லையென்றாலும், ஏழு நாட்களுக்கு பின், மறு பரிசோதனை நடத்த வேண்டும்.

அந்த சோதனையில், 'நெகட்டிவ்' என்றால், மீண்டும் ஏழு நாட்கள், வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும். அனைத்து பயணிகள் கைகளிலும், தனிமைப்படுத்தப்படுவதற்கான முத்திரை குத்தப்படும். இவ்வாறு அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.