ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் அவதி

சென்னை: திடீரென்று உயர்ந்த விலை... தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு வகையான ஆவின் இனிப்புகள் விற்கப்படுகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் ஆவின் இனிப்பு வகைகள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன.


ஆவின் பால், பால் பொருட்கள், இனிப்பு வகைகள் தரமாக இருப்பதோடு தனியாரை விட விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது. தனியார் நிறுவனங்களின் பால், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் ஆவினை விட பலமடங்கு அதிகமாக விற்கின்றன.

இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பின் காரணமாக நெய், தயிர், மோர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்ந்துள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு வகையான ஆவின் இனிப்புகள் விற்கப்படுகின்றன.

அவற்றுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக நிர்வாக இயக்குனர் சுப்பையா தெரிவித்துள்ளார். எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் ஆவின் இனிப்பு வகைகள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.120-க்கு விற்கப்பட்ட 250 கிராம் மைசூர்பாகு ரூ.140 ஆகவும், அரைகிலோ மைசூர்பாகு ரூ.230-ல் இருந்து ரூ.270 ஆகவும், மில்க்பேடா 100 கிராம் ரூ.55 ஆகவும், 250 கிராம் ரூ.130 ஆகவும் அதிகரித்துள்ளது.


சுவீட் இல்லாத கோவா அரைகிலோ ரூ.300, ஒரு கிலோ ரூ.600 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேரிச்சம்பழம் கோவா அரை கிலோ ரூ.270, 100 கிராம் ரூ.140-க்கும், கோவா 100 கிராம் ரூ.50, கால் கிலோ ரூ.130, அரைகிலோ ரூ.250 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. குலோப்ஜாமுன், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளன. புதிய விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.