நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மன அழுத்தம் இருந்தால் மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

சென்னை: இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு சிறப்பாக நடைபெற்றது.

இதை அடுத்து இத்தேர்வின் முடிவுகளை மாணவர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மன அழுத்தம் இருந்தால் மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நீட் தேர்வு எழுதிய 564 மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டு 110 மனநல ஆலோசகர்களை கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெற கூடாது என்பதை கருத்தில் கொண்டு அரசு மாவட்ட மனநல மருத்துவர்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மன நல ஆலோசனை குழு மாணவர்களை கண்காணித்து கொண்டு வருகிறது. இதையடுத்து மறுபுறம் தமிழக அரசு மத்திய அரசின் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறது.