பேரறிவாளனை வாரம் ஒருமுறை சந்திக்க அவரது தாயாருக்கு அனுமதி

வாரம் ஒருமுறை சந்திக்க நீதிமன்றம் அனுமதி... பேரறிவாளனைச் சந்திக்க அற்புதம்மாளுக்கும், உறவினர்களுக்கும் அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜன.19 வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனைச் சந்திக்க அவரது தாயார் அற்புதம்மாளுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் உடல் நலம் சரியில்லாமல் பரோலில் வெளியில் வந்த பேரறிவாளன், கடந்த 7-ம் தேதி மீண்டும் சிறைக்குச் சென்றார்.

பேரறிவாளனைச் சந்திக்க அற்புதம்மாளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மற்றும் உறவினர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என ஆட்கொணர்வு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வழக்கில் பதிலளித்த சிறைத்துறை, கொரோனா காலம் என்பதால் பேரறிவாளனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரைக் காணொலிக் காட்சி வாயிலாகச் சந்திக்க அனுமதிக்க முடியும். ஆனால், பேரறிவாளனின் வழக்கறிஞர் எனக்கூறி பலர் கும்பலாகச் சந்திக்க வருகின்றனர், இதனால் தொற்று அதிகரிக்கவே வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அமர்வு, 'உறவினர்கள், நண்பர்களைக் காணொலிக் காட்சி வாயிலாக அனுமதிக்க வேண்டும். வழக்கறிஞர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெயர்ப் பட்டியலைச் சிறை நிர்வாகத்திடம் கொடுக்கும் பட்சத்தில் அதில் யாரை அனுமதிப்பது என்பதை சிறை சூப்பிரண்டு முடிவெடுக்க வேண்டும்.

அற்புதம்மாளைப் பொறுத்தவரை தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதைப் பரிசோதித்து மருத்துவச் சான்றிதழை அவர் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி ஜனவரி 19 வரை வாரம் ஒருமுறை அவரை அனுமதிக்க வேண்டும்' எனச் சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.