கொரோனா வைரஸுக்கு சொரியாசிஸ் மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு இன்றுவரை எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. கொரோனா வைரஸ் தொற்றை குணமாக்க உலகளாவிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது பிற நோய்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சொரியாசிஸ் என்ற சரும பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துகிற ‘இட்டோலிசுமாப்’ என்ற நோய் எதிர்ப்புச்சக்தி ஊசி மருந்தை, கொரோனா நோயாளிகளுக்கும் அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஊசி மருந்தை பெங்களூருவை சேர்ந்த பயோகான் மருந்து நிறுவனம் தயாரித்து, சந்தையிடுகிறது. இந்த ஊசி மருந்தை மிதமான மற்றும் கடுமையான நாள்பட்ட சொரியாசிஸ் பிரச்சனைக்கு டாக்டர்கள் பரிந்துரைத்து அளித்து வந்தனர். உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற இந்த மருந்து, இப்போது கொரோனா வைரஸ் சிகிச்சையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மருந்தினை சம்பந்தப்பட்ட நோயாளியின் சம்மதம் பெற்றும், இடர்ப்பாடு நிர்வாக திட்டம் வகுத்தும், ஆஸ்பத்திரி அமைப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிபந்தனைகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவ சோதனையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகிற இந்த மருந்து பிற மருந்துகளை விட விலை மலிவானது என தகவல்கள் வெளியாகியுள்ளன.