ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி

அடையாள அட்டையை பயன்படுத்தலாம் ... அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி சுகாதார சேவைகள், விமான நிலையம், வெளிவிவகார அமைச்சு, தீயணைப்பு திணைக்களம் மற்றும் வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளில் பணிபுரிவோரே தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு வேளை அனுமதிக்குப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவர்கள் தங்கள் பணியிடத்துக்குச் செல்லும் போதும் வெளியேறும் போதும் கொரோனா தொற்று சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 32 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,075 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 8,413 பேரில் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 4776 ஆக காணப்படுகின்றது.

அத்தோடு 445 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளத்துடன் கொரோனா தொற்றினால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.