பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி

உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.61 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் அரசு மருந்து கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எப்டிஏ) வல்லுநர் குழுவினர், பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று பைசர் தடுப்பூசிக்கு எப்டிஏ அங்கீகாரம் அளித்துள்ளது.

மேலும், அவசர தேவைகளுக்கு மருந்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகவும், இந்த தடுப்பூசியை 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு வழங்கலாம் என எப்டிஏ கூறி உள்ளது. இதனால் ஓரிரு தினங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. முதல் சுற்றில் 2.9 மில்லியன் டோஸ்கள் போடப்படுகிறது.

முதல் சுற்றில் சுகாதார பணியாளர்கள் மற்றும் நீண்டகாலமாக மருத்துவ கவனிப்பில் உள்ள முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இரண்டாவது தடுப்பூசியாக மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கும் விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என தெரிகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த மாதம் தடுப்பூசி பெறுவார்கள்.