ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி பெற்றுத்தர கோரி மனு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூரில் பழமையும் பெருமையும் வாய்ந்த உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுவிழா ஆண்டு தோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை காலங்களில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி தமிழகத்தில் அது நடைமுறைப் படுத்தப்பட்டது.

தற்போது படிப்படியாக பல தளர்வுகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் 16-ம் தேதி தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விழா நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு தளர்வு வழங்க வேண்டுகோள் விடுக்க ஜல்லிக்கட்டு விழாக்குழு முடிவு செய்தது.

அதன்படி வாடிப்பட்டி தலைமையிடத்து துணை தாசில்தார் வனிதாவிடம் ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி பெற்றுத்தர கோரி தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் விழாக் குழுவினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- வருகிற 16-01-2021 தை மாதம் 3-ம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா நடைபெற இருப்பதால் இதற்கு அரசு அனுமதி பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் அரசு விதிக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்போம் என்பதை உறுதி கூறுகிறோம் என அதில் கூறப்பட்டிருந்தது. விழாக் குழுவினருடன் ஜல்லிக்கட்டு விழாக்குழு துணைத் தலைவர் பாலாஜி, செயலாளர் சுந்தரராகவன், பொருளாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.