பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க உத்தரவிடக் கோரி மனுதாக்கல்

சென்னை: பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 மற்றும் அரிசி, சர்க்கரையுடன் வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ம் தேதி அறிவித்தது. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லாததற்கு பல அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பொங்கல் பரிசு தொகுப்புக்கு நல்ல விலைக்கு கரும்புகளை அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாததால் குறைந்த விலைக்கு கரும்பு விற்க வேண்டியுள்ளது.

இதனால் கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையை திருப்தியாக கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை மற்றும் கரும்புகளை பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கடந்த டிசம்பர் 24ம் தேதி மனு அளித்துள்ளேன்.

அம்மனுவை தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.