வேளாண் உதவி திட்ட முறைகேடு குறித்து நாளை மாவட்ட ஆட்சியர்களிடம் மனு

அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு... பிரதம மந்திரி வேளாண் உதவித் திட்டத்தில் மோசடி நடந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் பாஜக சார்பில் மனு அளிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''பிரதம மந்திரி வேளாண்மை உதவித் திட்டம் நலிவுற்ற விவசாயிகள் தங்களுடைய விவசாயப் பணிகளை மேற்கொள்ளப் பயன்படுகிறது. எந்தவித இடர்ப்பாடும் இன்றி விவசாயம் நடைபெற வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இணையதளத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளைத் தவறுதலாகக் கையாண்டு அரசாங்கத்தை ஏமாற்றி, சிலர் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு இந்த உதவித் தொகையைப் பெற்றுத் தருகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியது.

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் இந்த ஆண்டு திடீரென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 40,000 பேர், 30,000 பேர் என்று புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.

ஒரே வங்கியில் 300 பேர், 400 பேர் என்று தவறான நபர்கள் உதவி பெற்று வருகிறார்கள். விவசாயிகள் அல்லாதவர்கள் ஆயிரக்கணக்கானோர் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய மோசடியாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெறுவோர் பற்றிய கணக்கெடுப்பை மாநில அரசு மிகத்தெளிவாகப் பரிசீலனை செய்து, இந்தத் தொகை உரிய விவசாயிகளுக்கு கிடைக்கிறதா அல்லது பல இடங்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்று இருக்கிறதா என ஆராய வேண்டும்.

இதில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் மாநில அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி நாளை காலை 11 மணியளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக்கப்பட இருக்கிறது.

விவசாய அணிகள் உட்பட அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர். இது தொடர்பாக மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழு ஏற்படுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் கண்காணிப்பை விரிவுபடுத்தி உண்மையான விவசாயிகளுக்கு மட்டும் உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்''. இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.