சிரியாவில் தூக்கு கயிறு மாட்டப்பட்ட நிலையிலும் புன்னகையுடன் காணப்படும் நபரின் புகைப்படம் வைரல்

சமூக வலைதளங்களில் தற்போது, கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்ட நிலையிலும் முகத்தில் புன்னகையுடன் நிற்கும் நபரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் சிரியாவில் எடுக்கப்பட்டதாகவும், தூக்கு முனையில் நிற்பவர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதால் தூக்கிலிடப்பட்டதாக அந்த வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ மத நம்பிக்கை கொண்டிருந்ததால், இந்த நபர் தூக்கிலிடப்பட்டார். கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருப்பதால் புகைப்படத்தில் இருப்பவர் சிரித்து கொண்டிருக்கிறார். நாம் கடவுள் மற்றும் காப்பாளரின் பெருமையை போற்ற வேண்டிய நேரம் இது எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்ததில், அந்த புகைப்படத்தில் இருப்பவர் மஜித் ஔசிபர் என்பதும், இவர் நீதிபதியை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஈரானில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் செய்தி தொகுப்புகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதன் மூலம், அந்த வைரல் புகைப்படத்தில் இருப்பவர், கிறிஸ்துவ மத நம்பிக்கை கொண்டிருந்ததால், தூக்கிலிடப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள்,சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படலாம். எனவே உண்மை தன்மையை அறியாமல் போலி செய்திகளை பரப்பாதீர்கள்.