சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அரசியல், திரையுலகத்தினர் படங்கள் கொண்டு செல்ல தடை

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு அரசியல் மற்றும் திரையுலகப் பிரமுகர்களின் படம் கொண்டு செல்ல பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என்று கேரளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானம் செல்லும் ஒரு சில பக்தர்கள் மேளம் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் ஐயப்ப கானம் பாடி சபரிமலைக்கு செல்வது வழக்கம். மேலும் சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் செல்கின்றனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு சென்று திரும்பிய பக்தர் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சன்னிதானத்தில் மேளம் இசைக்க தடை விதிக்க வேண்டும் என்றும், சபரிமலைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் படம் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சபரிமலை கோயிலில் மேளம் முழங்க தடை விதித்தது. மேலும், சபரிமலைக்கு அரசியல் மற்றும் திரையுலகப் பிரமுகர்களின் படம் கொண்டு செல்ல பக்தர்களை அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.