வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர கூடுதல் விமானங்கள் இயக்க திட்டம்; மத்திய அமைச்சர் தகவல்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர கூடுதல் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தெரிவித்துள்ளார்.

'அமெரிக்காவில் தவிக்கும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களை அழைத்து வர விமானங்களை இயக்க வேண்டும்' என, மஹாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர, சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும், சில விமானங்களை இயக்கி வருகிறோம். அவ்வாறு வந்தவர்களுக்கு தேவையான உதவிகளை, மஹாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செய்துள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவில் தவிக்கும் இந்தியர்கள், 'நாடு திரும்ப கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, 'ஹூஸ்டன் மற்றும் டல்லாஸ் நகரங்களில் இருந்து விமானங்களை இயக்க வேண்டும்' என, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, இந்திய துாதரகம், வெளியுறவு அமைச்சகத்துக்கு, ஆன்லைன் மூலமாக அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இலங்கையில், கடந்த இரண்டு மாதங்களாக தவிக்கும், 2,400 இந்தியர்கள் நாடு திரும்புவது எப்போது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அங்குள்ள இந்தியத் துாதரகத்தை தினமும் தொடர்பு கொண்டு, அவர்கள் விசாரித்து வருவதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.