டெல்லியில் கொரோனா சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா காரணமாக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோ வைரஸால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. பிளாஸ்மா சிகிச்சை அளித்த இரண்டு மூன்று நாட்களில் அவர் குணமடைந்து விட்டார். இதனால் டெல்லி அரசு பிளாஸ்மா சிகிச்சையை அதிகப்படுத்த முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கியை தொடங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அவர்களுடைய பிளாஸ்மாவை வழங்க கேட்டுக்கொள்கிறேன். இந்த பிளாஸ்மா வங்கி டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தில் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் பி.லிம்போசைட் செல்களால் சுரக்கப்படும் கொரோனா ஆன்டிபாடீஸ்களை பிரித்து எடுத்து அதனை கொரோனா பாதிப்புடைய நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி எனப்படும். இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிர்ணயித்துள்ள திட்ட வழிமுறைகள் பின்பற்றியே இந்த பிளாஸ்மா எடுக்கப்படும்.