மணிப்பூர் மகள்களுக்கு நேர்ந்த சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது ..பிரதமர் மோடி

புதுடெல்லி: குற்றவாளிகள் தப்ப முடியாது - பிரதமர் மோடி உறுதி ... மணிப்பூரில் பெண்கள் ஆடையின்றி அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:- மிகுந்த வேதனையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் நான் நிற்கிறேன்.

மணிப்பூர் மகள்களுக்கு நேர்ந்த சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தப்ப முடியாது என நாட்டு மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மணிப்பூரில் நடந்த இச்சம்பவம் நாகரிகமான எந்த சமுதாயத்துக்கும் அவமானம். மேலும் இது ஒட்டுமொத்த நாட்டையும் அவமானப்பட செய்து உள்ளது. நாட்டு மக்கள் 140 கோடி பேரும் வெட்கி தலைகுனிகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தக்க கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்களை மேலும் வலுப்படுத்துமாறு அனைத்து முதல்வர்களையும் கேட்டுக் கொள்கிறேன். ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தி பெண்களை பாதுகாக்க வேண்டும். மக்கள் சட்டம் - ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளித்து பெண்களை மதிக்க வேண்டும்.

மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை எம்.பி.க்கள் நன்கு பயன்படுத்தி, மக்கள் நலன் சார்ந்த மசோதாக்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என அவர் கூறினார்.