சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார்... ராகுல்காந்தி ட்விட்டர் பதிவு

புதுடெல்லி: சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் வகையில், சீனா அம்மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை “திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்” என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், இரண்டு நிலப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும்.

சீனா உரிமை கொண்டாடும் பகுதி எப்போதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இந்த இடங்களுக்கு சீனப் பெயர்களை வைத்து தங்களுக்குச் சொந்தமான இடங்கள் என சீனா கோருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி கூறுகையில், சீனா இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது இது முதல் முறை அல்ல. புதிதாகப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களைக் கொடுப்பதால், களத்தின் நிலைமை மாறாது. அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது என்று தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சீனா 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நமது நிலத்தை அபகரித்துள்ளது.

தற்போது இடங்களின் பெயர்களை மாற்றி வருகின்றனர். பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். எந்த பதிலும் இல்லை! ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.