அதிபர் ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

புதுடில்லி: அமெரிக்கா பயணம்... இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24 வரை 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார்.

ஜூன் 21ம் தேதி ஜோ பைடன், ஜில் பைடன் தனிப்பட்ட முறையில் அளிக்கும் விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையடுத்து ஜூன் 22ம் தேதி காலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். தொடர்ந்து அன்று இரவு வௌ்ளை மாளிகையில் தெற்கு புல்வௌியில் நடக்கவுள்ள மாபெரும் அரசு விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த விருந்தில் கலந்து கொள்ளும்படி அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரவு விருந்துக்கு பின் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார். இதற்காக வௌ்ளை மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தி தொடர்புக்காக மேற்பார்வையாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.