பணியில் சேரும்பொழுதே ஏரியா ரவுடிகள் பயப்பட வேண்டும் என போலீசார் நினைக்கின்றனர் - பிரதமர் மோடி

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் இளம் ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று உரையாடினார். அப்போது அவர், உங்களது காக்கி சீருடையின் அதிகாரத்தினை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு பதிலாக அதனை அணிந்து கொள்வதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம் என்று கூறினார்.

உங்களுடைய காக்கி சீருடைக்கான மரியாதையை ஒருபொழுதும் இழக்காதீர்கள். போலீஸ் அதிகாரிகள் பணியில் சேரும்பொழுது, ஒவ்வொருவதும் நம்மை கண்டு பயப்பட வேண்டும். குறிப்பிடும்படியாக நமது ஏரியா ரவுடிகள் அனைவரும் பயப்பட வேண்டும் என நினைகின்றனர். சிங்கம் போன்ற படங்களை பார்த்து விட்டு, தங்களை பற்றி அவர்கள் பெரிய அளவில் நினைத்து கொள்கின்றனர் என மோடி கூறினார்.

படங்களை பார்த்து விட்டு, தங்களை பற்றி அவர்கள் பெரிய அளவில் நினைப்பதால், உண்மையான பணி புறக்கணிக்கப்படுகிறது. இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும். நமது பணி புறக்கணிக்கப்படவில்லை என்பதனை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மோடி கூறினார்.

மேலும் அவர், கொரோனா பாதிப்பு போன்ற காலத்தில் நல்ல முறையில் பணியாற்றி, காக்கி சீருடையில் இருந்த போலீசாரின் முகம் பொதுமக்களின் மனதில் நன்றாக பதிந்துள்ளது. பணி தொடர்புடைய மனஅழுத்தத்தினை எதிர்கொள்ள யோகா உள்ளிட்டவைகளை மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.