கங்கனா ரணாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்துவார்கள் - அனில் தேஷ்முக்

சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் கூறினார். அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் நடிகைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. மேலும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக கங்கனா ரணாவத் பாலிவுட் நடிகர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்தார்.

இந்நிலையில், தனக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கங்கனா ரணாவத் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மந்திரிகள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தின் முன்னாள் காதலன் ஆத்யாயன் சுமன் பேட்டி ஒன்றில், கங்கனா போதைப்பொருள் பயன்படுத்துவார். தன்னை அதை பயன்படுத்த வலியுறுத்தியதாக கூறியிருந்தார்.

தற்போது மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், பழம்பெரும் நடிகர் சேகர் சுமனின் மகனான ஆத்யாயன் சுமனுடன் நடிகை கங்கனா உறவில் இருந்தார். அப்போது கங்கனா போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியினர் எதிர்ப்புக்கு இடையே இன்று மும்பை வருவதாக கங்கனா ரணாவத் சவால் விட்டு இருந்தார். மும்பை வரும்போது நடிகை கங்கனா ரணாவத்துக்கு இந்திய குடியரசு கட்சியினர் பாதுகாப்பு வழங்குவார்கள் என அக்கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.