கர்ப்பிணி பெண் யானை கொலை விவகாரம்; சுற்றுச்சூழல் அமைச்சகம் டுவிட்டர் பதிவு

தற்செயலாக சாப்பிட்டு இருக்கலாம்... கேரளாவில் கர்ப்பிணி பெண் யானை வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை தற்செயலாக சாப்பிட்டு இருக்கலாமென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சைலன்ட் வேலி பகுதி காட்டு யானைகள் நிறைந்த இடம். இங்கிருந்து உணவு தேடி வெளியே வந்த பதினைந்து வயது மதிக்கத்தக்க கர்ப்பம் தரித்த யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. அப்போது சிலர் வெடிபொருள் நிரப்பிய அன்னாசி பழத்தை யானைக்கு கொடுத்துள்ளனர்.

அப்பாவி யானை வாயில் பழத்தை போட்ட வேகத்தில், உள்ளிருந்த வெடிப்பொருள் வெடித்ததில் யானையின் வாய், தாடை, நாக்கு எல்லாம் சிதறியது. வயிற்றில் இருந்த ஒரு மாத குட்டிக்காக வேறு உணவு பொருட்களை சாப்பிட முயன்று எதுவும் முடியாமல் போகவே, வேதனையை மறக்க வெள்ளியாற்றில் இறங்கி வாய்ப்புண்ணால் ஏற்பட்ட எரிச்சலை தணிக்க முயற்சித்துள்ளது.

ஆனால் மூன்று நாட்கள் அதே இடத்தில் நின்றிருந்த யானை மீட்க வனத்துறையினர் முயற்சித்த போது ஜல சமாதியானது தெரியவந்தது. நாட்டையை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக கேரள அரசு, வனத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

பலமுறை உள்ளூர்வாசிகள் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க, சட்டவிரோதமாக வெடிமருந்து நிரப்பிய பழங்களை வைத்திருத்திருக்கலாம். கேரளாவில் கர்ப்பிணி பெண் யானை வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை தற்செயலாக சாப்பிட்டு இருக்கலாமென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் கேரள மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளது.