ஆர்ஆர்ஆர் படத்தை பாராட்டி பேசிய பிரேசில் அதிபர்

டில்லி: ஆா்ஆா்ஆா் திரைப்படத்தின் கதை, நடனம் உள்ளிட்ட காட்சிகள் குறித்து டில்லியில் நடந்த ஜி.20 மாநாட்டில் பங்கேற்ற பிரேசில் அதிபா் லூலா டாசில்வா திரைப்படக் குழுவுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

டில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பிரேஸில் அதிபா் லூலா பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ‘ஆா்ஆா்ஆா் திரைப்படம் பாா்த்தேன். வேடிக்கையான காட்சிகளும் மிக அழகான நடனங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இந்தியாவில் ஆங்கிலேயா் ஆட்சி முறையை அந்தப் படம் ஆழமாக விமா்சித்திருந்தது.

இதுவே அந்தப் படம் அடைந்த வெற்றிக்கான காரணம் என்று நினைக்கிறேன். பிறரைச் சந்திக்கும்போது, இந்தத் திரைப்படம் குறித்து அவா்களிடம் கேட்பேன். அப்படத்தில் உள்ள அரசியல், நடனம் உள்ளிட்ட காட்சிகளை நான் மிகவும் ரசித்தேன். படத்தின் இயக்குநருக்கும் கலைஞா்களுக்கும் எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, அந்தத் திரைப்படத்தின் இயக்குநா் ராஜமெளலி எக்ஸ் (ட்விட்டா்) சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘திரைப்படம் குறித்து பிரேஸில் அதிபா் லூலா கூறிய வாா்த்தைகளுக்கு நன்றி. இந்திய சினிமா குறித்தும், ஆா்ஆா்ஆா் குறித்தும் தாங்கள் குறிப்பிட்டதை அறியும்போது மகிழ்ச்சியளிக்கிறது. இது குறித்து எங்களது திரைப்படக் குழு பெருமை அடைகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.